Thursday, December 15, 2011

கூடன்குளம் வல்லுனர் அறிக்கை..

கூடன்குளம் பற்றிய வல்லுனர் அறிக்கை கீழ்கண்ட இணைப்பில் உள்ளது..


http://www.thehindu.com/multimedia/archive/00841/Expert_Group_report_841167a.pdf


நன்றி..

Monday, December 12, 2011

விமர்சனம்- விமர்சனத்தைப் பற்றிய ஒரு விமர்சனம்...

இன்றைய தேதியில் பலரும் பலவிதமான விமர்சனங்களை பல விசயங்களில் சொல்லி வருகிறார்கள். கருத்து சொல்லுகிற விசயங்களைப் பற்றி தெளிவாக தெரிகிறதோ இல்லையோ தமது கருத்துக்களை உடனுக்குடன் சொல்லி விடுகிறார்கள். அது சரியானதா? அல்லது  தவறான பழக்கமா? என யோசித்த பொழுது இதைப் பற்றிய ஒரு பதிவு எழுதலாம் எனத் தோன்றியது.
முதலில் கருத்து சொல்ல ஒவ்வொருவருக்கும் சுதந்திரம் உள்ளது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும்  இல்லை. ஆனால் ஆழ்ந்த அறிவு இல்லாமல் சொல்லப் படுகிற விசயங்களுக்கும் விமர்சனங்களுக்கும் ஆயுள் குறைவு என்பதே உண்மை. ஒரு விசயத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் பொழுது நாம் இரு விசயங்களை செய்கிறோம்.  ஒன்று அவ்விசயத்தைப் பற்றி நமது பார்வையை அல்லது உணர்வை தெரிவிக்கிறோம் மற்றொன்று நம்மைப் பற்றியும் நாம் மற்றவர்களுக்கு மறைமுகமாக ஒரு புரிதலைக் கொடுக்கிறோம். ஆம் நமது விமர்சனம் நமக்குத் தெரியாமல் நம்மைப் பற்றியும் வெளிப் படுத்துகிறது.
விமர்சனம் என்பது ஒரு விசயத்தை, சம்பவத்தை, ஆக்கத்தை, தனிநபரை,குழுவை, அல்லது சமுதாயத்தை  மதிப்பீடு செய்து முன்வைக்கப்படும் பொதுவான கருத்துக்கள் ஆகும்
அது ஒரு மதிப்பீடு.. தொழில் நுட்ப முறையில் சொன்னால் அது ஒரு quality analysing போன்றது.
எந்த விசயத்தை எடுத்தாலும் அதில் நான்கு வகையான மனிதர்கள் இருப்பார்கள்.1.அதைப் பற்றி எதுவும் தெரியாதவர்கள் 2.குறைவாக தெரிந்தவர்கள் 3.நன்கு தெரிந்தவர்கள் 4.வல்லுனர்கள்.
இவர்கள் அனைவரும் ஒரு விசயத்தைப் பற்றி கருத்து கூறுவது எப்படியிருக்கும் என யோசித்துப் பாருங்கள். இதில் தெரியாதவர்கள் சுய கட்டுப்பாடுடன் கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அது அவர்களைத்தான் பாதிக்கும். சில சமயம் அவர்களின் மதிப்பைக் கூட குறைத்து விடும்.
உதாரணமாக மருத்துவரீதியான ஒரு விவாதம் என்று வைத்துக் கொள்வோம்,  பொதுவாக மருத்துவர்களுக்கு ( 1 சதவீதம் தகுதி குறைந்தவர்களை விட்டு விடுவோம்) அதைப் பற்றிய அறிவு நன்றாக இருக்கும். அவர்களிடம் ஒரு எழுத்தாளரையோ, இயக்குனரையோ விவாதம் செய்ய சொன்னால் எப்படி பொருத்தம் இல்லாமல் இருக்குமோ அது போலத்தான் இன்று பல விசயங்களில் பல பேர் கருத்து சொல்லி வருகிறார்கள்.
இன்னொன்று சமுதாயத்தில் சிலர் அடிபட்டு மிதிபட்டு கடினமாக உழைத்து ஒரு நல்ல உயரத்திற்கு வந்திருப்பார்கள். அவர்களைப் பற்றி மிக எளிதாக தரக்குறைவாக விமர்சிப்பது... அல்லது மிகக் கடினப்பட்டு உருவாக்கிய ஒரு படைப்பை மிக எளிதாக  அதை பற்றிய புரிதல் இல்லாமல் போகிற போக்கில் விமர்சிப்பது..
ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. ஒருமுறை டீ குடிப்பதற்காக ஒரு சிறிய டீக்கடைக்கு சென்றிருந்தேன். அங்கே இரண்டு கையில் தினசரியோடு விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் சொன்னார் ஜார்ஜ் புஷ் இப்படி செய்திருக்கக் கூடாது நானாக இருந்தால் வேறு மாதிரி செய்திருப்பேன். இதைக்கேட்ட எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னை புத்திசாலியாக நினைத்துக் கொள்கிறார்களா அல்லது அடுத்தவர்களையெல்லாம் முட்டாளாக நினைக்கிறார்களொ தெரியவில்லை. உண்மையில் அவ்வளவு அறிவிருந்தால் டீக்கடையில் தினசரி படித்து பொழுது போக்க அவசியம் என்ன வந்தது. இது ஒரு உதாரணம் தான். இது போல் பல பேர் பல ரூபங்களில்...
படித்தது ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு மிகச் சிறந்த அறிவுறை என்பது எப்படி வாழ வேண்டும் என்பதை வாயால் சொல்வதல்ல, மாறாக வாழ்ந்து காட்டுவது. இன்று நிறைய பேர் வாயால்தான் சொல்கிறார்கள் மற்றவகள் மட்டும் வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற கொள்கையோடு இருக்கிறார்கள்.
பல அப்பாக்கள் தங்கள் குழந்தைகளிடம் சிகரெட் வாங்கி வரச் சொல்லுகிறார்கள் அல்லது அவர்கள் முன் அதைக் குடிக்கிறார்கள். பின்பு சிகரெட் குடிக்கக் கூடாது என்று பிள்ளைகளுக்கு  அறிவுறை கூறுகிறார்கள். அப்பாக்கள் தான் குழந்தையின் முதல் ஹீரோ அல்லது ரோல் மாடல்.
நான் இதை ஏன் கூறுகிறென் என்றால் விமர்சனங்கள் பண்ணும் போதும் நாம் நல்ல அப்பாக்கள் போல நடந்து கொள்ள வேண்டும் என்பற்காகத்தான்..
இன்னொரு விசயத்தையும் கூற விரும்புகிறேன். நம்மிடையே யாராவது ஒரு கேள்வி கேட்டால் பல பேர் அதைப்பற்றி தெரியாவிட்டாலும் கூட தெரியாது என்று சொல்வதில்லை. ஏதாவது ஒரு பதிலை குத்துமதிப்பாக சொல்லும் பழக்கமிருக்கிறது. முதலில் நமக்கு என்ன தெரியும் எனன தெரியாது என்பதப் பற்றிய புரிதல் வேண்டும். எது தெரியாது என்ற புரிதல் இருந்தால்தான் அதைப் பற்றிய தேடலில் ஈடுபட முடியும்.விமர்சனம் செய்பர்களில் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள்.
விமர்சகன் தனிமனித விருப்பு, வெறுப்பிற்கு அப்பாற் சென்று விமர்சிப்பவனாகவும், பக்கச்சார்பற்றவனாகவும், துறைசார்ந்த நல்லறிவு உடையவனாகவும் விளங்க வேண்டும். மேலும் பிற துறைகள் சார்ந்த தெளிவும், அறிந்து கொள்ளும் ஆர்வமும், அனைத்துத் துறைகளையும் சமமாக மதிக்கும் ஆற்றல் மிக்கவனாகவும், ஆக்கத்தை ஒப்புமைப்படுத்தி ஆராயும் பண்புடையவனாகவும் இருக்க வேண்டும் என்பவை முக்கியமானவையாகும்
ஒருவர் சொன்னார் நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரிடம் செல்கிறோம். ஏதாவது வழக்கு என்றால் வழக்கறிஞரிடம் செல்கிறோம். விஞ்ஞான விசயங்களில் சந்தேகமென்றால் விஞ்ஞானிகளிடம் தானே செல்ல வேண்டும். அதற்கு மட்டும் எழுத்தாளர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் ஏன் சொல்கிறோம் என்று.
உங்களுக்கு இலக்கிய அறிவு இல்லையெனில் ஒரு இலக்கியத்தைப் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள். இலக்கிய வாதிகளின் விமர்சனங்களைப் படியுங்கள். இதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருங்கள். பார்வையாளராக இருந்து கற்றுக்கொள்ளுங்கள் . ஏனெனில் அது உங்கள் துறையல்ல. உங்கள் துறை சார்ந்த விசயங்களில் உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன் வையுங்கள். அது உங்களுக்கு புகழைத் தேடித்தரும். எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைப்பது  சிறுமையே தரும்.
ஒரு பாமரனாக எல்லா விசயங்களிலும் கருத்து கூறுவேன். இது என் ஜனநாயக உரிமை என்று கூறுவீர்களானால் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன். பாமரன் தன்னுடய பணியை உணர்ந்து அதை செவ்வனே செய்பவன். தாணுண்டு தன் பணியுண்டு என வாழ்பவன். ஒரு மருத்துவரை விட ஒரு பொறியாளரை விட  ஒரு கலைஞனை விட ஒரு எழுத்தாளனை விட ஒரு விஞ்ஞானியை விட ஒரு பாமர விவசாயி உன்னதமானவன். ஏனென்றால் அவன்தான் உலகத்திலுள்ள உயிர்கள் வாழ்வதில் பெரும் பங்கு வகிக்கிறான்.. அவன் யாரையும் விமர்சிப்பதில்லை..

Monday, December 5, 2011

நான் ரசித்த கவிதை..

வேலிக்கு  வெளியே
தலையை  நீட்டிய  என்
கிளைகளை  வெட்டிய
தோட்டக்காரனே!
வேலிக்கு  அடியில்
நழுவும்  என்  வேர்களை
என்ன  செய்வாய்?
-கவிக்கோ  அப்துல் ரகுமான் 

சுயநலமிக்க மனிதரைச் சாடும் இந்த கவிதை நான் மிகவும் ரசித்தது..